Monday, January 11, 2010

வலிகள் வரைந்த கோடுகள்











வார்த்தைக‌ள்
அனாதையாய் அலைகிற‌தே ஏன்?

பூக்க‌ளின் சார‌ல் விழும்
சாலை ஓர‌த்தில்
தென்ற‌ல் ஒன்று
வேலை நிறுத்த‌ம்செய்கிற‌தே ஏன்?

மேக‌ங்க‌ள் விர‌க்த்தியில் அலைவ‌துபோல‌வும்...
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்
வெறுமையில் விளைவ‌துபோல‌வும்...
தோன்றுகிற‌தே ஏன்?


மேனிப்ப‌ர‌ப்பெங்கும்
இருத‌ய‌த்துக்குள்ளும்
த‌ந்திமீட்டும் இசை ஒன்று
தெழ்ழ‌முதுக்குப்ப‌தில்
ம‌ருந்தாய்க் க‌ச‌க்கிற‌தே ஏன்?

இப்ப‌டி விடைதோன்றாக் கேள்விக‌ள்
என் த‌னிமையின் கூட்டு வெளிச்ச‌ம்தானோ

என் வாழ்வெனும்
இசையில்
எல்லா வாத்திய‌ங்க‌ளும்
பிடுங்க‌ப்ப‌டுகிற‌போது
உன‌து குர‌ல் என்னும் இசைச்சுர‌ம் கூட‌வா
மௌனித்துப்போகும்

இறுதியாக‌
உன‌து வார்த்தைக‌ளின்
வ‌ர‌வுக்காய் காத்திருப்ப‌தில்
நான் நிச‌ப்த‌மாகிப்போனேன்

ச‌ங்கீத‌ ஆலாப‌னைய‌ய்
இருந்த‌வ‌ன்
சாகித்திய‌ங்க‌ளுக்காய் இர‌ந்துநிற்கிறேன்

கூடொன்றில் ச‌ந்தித்தோம்
கூடியிருந்தோம்
பிரிந்தோம்
பிரிய‌ப்போவ‌து பிரிய‌ங்க‌ளும்
என்று நினைக்க‌வில்லையே


இன்னும் சில‌
கிளிக‌ளின் இசையும்
என்னிட‌மிருந்த‌ன‌
இசையை இர‌சிப்ப‌வ‌ன் நான் என்ப‌தால்

ஆனால் என் ச‌ப்த‌ஸ்வ‌ர‌ங்க‌ளும்
உன்னிட‌ம‌ல்ல‌வா இருந்த‌ன‌

புரிந்துகொள்ளாதது நீ என்னும்போதுதான்
நான் பிரிந்துபோவதே எனக்குப் புரிகிறது

இதுபோல வலிகள் வரைந்த கோடுகளால்
பின்னப்பட்டுக்கிடக்கிறது
கலைந்துபோன நமது வண்ணங்கள்

நான் உன்னை தவிர்ப்பதாகச் சொல்லி
நீ என்னை தவிர்க்கிறாய்

தருவது நீயாக இருந்தால் - எனக்கு
வலிகூட சுகமென்பது புரியாதா உனக்கு

நான் கேட்காமலே என்னோடு சாலையோரத்தில்
நடக்க பிடித்திருந்தது உனக்கு
இப்போது சாலையோரம் சகாராவாய் சுடுகிறது
நான் செல்கையில் உனக்கு

ஸ்வ‌ர‌ங்க‌ளில்லாம‌ல் ச‌ங்கீத‌மேது?...

என‌து நேச‌ம் இசைச் சுர‌ங்க‌ளால் ஆன‌து
அந்த‌ இசையில் இருந்து நான்
தொலைவாக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிறேன்.


.....மீண்டும் நான் இசையாவேன்

Sunday, February 1, 2009

இரண்டாம் மனசொன்றின் சாட்சி

என்னில்
குறை என்ன கண்டாய்
கோதை மலர்த் தோழி

ஆயிரம்
அம்பு வீசி
என்னில் சினந்ததே
உன் பார்வை

மூன்றாம்
பிறை நிலவு
முகம்
சூரியனாய் சுட்டதே

இறுதியாக
கூரிய உன்
வார்த்தை ஆணிகள்
கழுமரச் சிலுவையில்
என்னை அறைந்துபோனதே

மூர்க்க
யானை ஒன்றினால்
துவசம் செய்யப்பட்ட
ஊரைப்போல
குலைந்துபோய்க் கிடக்கிறேன்
நான்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகளால்
குத்துண்டு குத்துண்டு
பட்ட காயங்களின்
எரிவோடு

சுயநலப் பூதமொன்று
எனக்குள்
அலைந்து திரிவதாய்...
அதன் நான்கு சுவர்களுக்குள்
நான்
அடையுண்டு கிடப்பதாய்...
சீற்ற சிங்கமொன்று
என்னை சீண்டி விடுவதாய்...
சிலவேளை
ஊதாரி போல என்
கோபங்களை நான்
செலவளித்துவிடுவதாய்...
நீ சாட்டிய
குற்றங்களுக்காக
கம்பியேயில்லாத
கூண்டொன்றில்
நிற்கிறேன் நான்

இத்தனையும்
யாரையும் புரிந்துகொள்ளாமல்
என்னை மட்டுமே
தியானித்துக்கொண்டு
நான் இழைத்தவைகளாம்

அன்றொருநாள்
பேசாதே என்றாய்
கவிதை மட்டுமே
பேசத்தெரிந்த உன்
விழிகள்
கத்தி கொண்டு துரத்த

அப்போதே - என் மனசு
குத்திக் கிழிந்த
கந்தலாய்
சாலை ஓரத்தில்
கிடந்தை நீ
பார்க்காமலா போனாய்

நீ
கடந்து போகிறாய்
பூவைப்போல் இருந்த
உன்னை
என் மனசில் இருந்து
பிடுங்கிக்கொண்டு

நீ இல்லாத
வெறுமை ஒரு
மலையின் சுமையாய்
என் தலைமீது கனக்கிறது

இத்தனைக்குப் பிறகும்
உன்னைத்தேடி
வருகிறேன் நான்
உன்னை மீண்டும், என்மீது
நிரவிக்கொள்வதற்காக அல்ல

ஒரு வார்த்தை
சொல்ல வேண்டும்

நன்றி

நீ காட்டிய
அக்கறைக்கும் அன்பிற்கும்

வார்த்தை நின்றுபோன உதடொன்றின் உச்சரிப்பு

யாரடிச்சும் வலிக்கவில்லை
நானடிச்சு வலிக்குதடி
உன் பார்வை
இழை பாய்ந்து
என் தொண்டைக்குள்
முடிச்சொன்று இறுகுதடி

இதுவரை என்ன நினைத்தாய்
இப்போது என்ன நினைக்கிறாய்
இனி என்ன...
முக்காலமும்
என் மூளைக்குள்
குமைந்துகொண்டு
சிக்கி என்னை சிறை வைக்குதடி

எனக்கென்ன உரிமை
அடம்பிடித்த உன்னை
அறைந்து அடக்க..
பச்சைக் குழந்தையா நீ, இல்லை
பாசமுள்ள பைங்கிளியா
நீ எனக்கு.
ஏதும் நினைக்கவில்லை நான்
நீயும் எதுவும் சொல்லவில்லை

இப்போதும்
நோகுதடி மனசு
உன் கண்களில்
அவிழ்ந்து கொட்டிய
முந்திரிகை முத்துக்களை
நினைக்க

இப்போதும்
இனிக்குதடி
நீ அழ
என் இருதய வேர்
காய்ந்ததை நினைக்க

சிதறிய
எம் இருதயத் துண்டுகளின்
பிரியத்தை சேகரித்து
இன்பம் செய்வோம் - வா

உடைந்த
இருதயத்தை வைத்தே
இன்னும் பெரிய
அன்பு செய்ய முடியும்
தயங்காமல் வா

மரணம் விழுங்கிய தோழன்

கண்மணி இரண்டு
கரைந்து கடலான சோகம்
தேகமே துளியாகி
சோகமாய் சொரிந்த மாதம் - எனக்கு
நண்பா நீ
உயிர் வறண்டு போனாயாமே

நாலு வார்த்தை
இல்லை
ஒரு வரி எழுத
எங்கே
என்னைச் சுற்றுகிறது
நம் வசந்தகாலம்

என் வாலிப
வற்றா நதியில்
உன் சுதி மட்டும்
சத்தமாய் கேட்க
சந்தமிழந்து போய்
சமாதியில் உறங்குகிறாய்
நீ

வண்ணங்களை நிறமாக்கி
பிரித்துப் பிரித்து
இதயத்தில் விழுத்தினேன்
இறணத்தில் இருந்து எழுந்து
நீ நீறாய் மிஞ்சிய
நிமிடம் மட்டும் மனசில்
நேசமாய் மிஞ்சுதடா

உன் கொல்லைப் புறத்தெரு
பள்ளிப் பருவ நாட்கள்
எல்லாம் ஞாபகத்திலிருந்தும்
கடைசியாய் பார்த்த
உன் முகம் மட்டும்
கண்ணுக்குள் மின்னுதடா

இரண்டாம் சாமம்
இளவரசிகளின் கனவு
இதற்குப் பிறகும்
உன் நினைவுகளிற்கிறைக்க
நீர் - என்
கண்களில் கனக்குதடா

இறப்போர் யாவரும்
துஞ்சுவர் - புரியும்
நீ பாதியில் பரமண்டலம்
போனகதை பற்றி
யாருக்கென்ன புரியும்

சாவின் செய்தி
உயிரின் முற்றுப்புள்ளி
எனது பதில்
சாவிர்குப் பிறகும்
ஒரு உயிர்
ஊற்றிய உணர்வு கொஞ்ச
உணர்வு நரம்புகளை
நனைக்காமலா போகும்.

Thursday, September 18, 2008

நீ சொன்ன வார்த்தை.............

நீ சொன்ன வார்த்தை
சூறாவளியை எனக்குள்ளே
சுவீகரித்துப் போயிற்று.

இன்னும் என்ன சொல்ல
நீயே சொல்லிவிட்டாய் - கழகத்திற்கு
காரணம் நான் என்று.

மின்னல்களை
உன்னோடு வைத்துக்கொண்டு
இடியை என்னோடு
தந்துவிட்ட மேகச் சகியே.....
நீ பொழிந்துவிட்டுப்
போன பிறகும்
நானல்லவா கண்ணீர் நதி
வடிக்கிறேன்.

கலைந்து போ
இன்னும் சில தேசங்களை
குளிரவை
இன்னும் சில பாறைகளையும்
குப்புற விழுந்து - ஆறாய்
குமிறி அழ வை......

நினைத்த மாத்திரத்தில்
மறந்திருக்கலாமடி - நீ
இப்போது எப்படி
எடுத்த எடுப்பில்
வெட்டி எறியவா
இத்தனைக்கும் பழகவிட்டாய்
நம் வார்த்தைகளை...

ஊருக்கு பிடிக்கவில்லையா!
நிறுத்திவிடலாம்.
இன்னும் சிலது பிடிக்கவில்லையாம்
செய்துவிட்டு வா.......
உன் புன்னகை பிடிக்கவில்லையாம்
உன் வளர்ச்சி பிடிக்கவில்லையாம்
உன் அழகு பிடிக்கவில்லையாம்
தடுக்க சாத்தியமா???

இன்னும் உனக்கு
புரியவில்லை தானே !!!!!
நீ சிரிக்க யார் மகிழ்கிறார்களோ...
நீ வலிபட யார் அழுகிறார்களோ....
நீ வருகிறபோது மலர்வும்
உன்னை பிரிகிற போது
யார் கண்ணில் நீரும் வருகிறதோ
அவர்களே உன் தோழர்கள் என்று....

சினேகிதி
நீ பிரிவது குறித்த
வருத்தத்திலும்
இந்த உலகையும் உன்னையும்
புரியாது போகிறாய்
என்பதே என் வேதனை

இங்கே கலைந்துவிட்டு
இன்னொரு காட்டில் போய் - இதை
நினைத்து குறுகி அழப் போவதை
நினைத்தே என் வருத்தம்.

தோழி.....
தாங்கும் கைகளை
இங்கே விட்டு விட்டு
எங்கே போகிறாய் விழிசிந்த....

கெஞ்சல்களால் என்னை
தைத்துவிட்டு
எங்கே போகப்போகிறாய்
கொஞ்சல்களுக்கு.......

நான் செய்தது குற்றம் தான்
அரை விழிகளால்
குறையுடல் மேயும் பார்வைகளுக்கிடயில்
அங்கமெங்கும்
ஆசைகளை தொங்கவிட்டு
காத்திருக்கும் விழிவேட்டை நாய்களுக்கிடயில்
என் முழுவிழி கொண்டு
உன் முகம் பார்த்து பேசியது
குற்றம்தான்.

அழகே அன்பாய்
பணமே பாசமாய்
போய்விட்ட பிறகும்
அன்பே அழகாய்
வார்த்தைகளே சீதனமாய்
கொண்டது குற்றம் தான்.

முன்பெல்லாம் கோரிக்கைகளால்
என்னை கொடுமைப்படுத்துவாய்
பொறுத்துக்கொண்டேன்
இப்போது
கட்டுப்பாடுகளால்
கட்டிப்போட்டு விட்டாயே!!

சகியே....
கொடிது கொடிது
தீண்டாமை கொடிது.

கூந்தல் முடி
விரல் நுனி
ஏற்று - கள்ளமில்லாமல்
தொட்ட ஸ்பரிசம் - இப்போது
எப்படி குற்றமாயிற்று

எனக்கு
கோடி தெரியாது
பாடி அழைக்க
வாடி என்றேன்
வெடிக்கிறாய்.

என் குறும்புகளையும் கூட
தூக்கி வைத்து
எனக்கு செல்லம் கொடுத்தவள்
நீதானே...
இப்போது
என் சினுங்கல்களை
எங்கு போய் கொட்டுவேன்
நான்.............

Friday, September 5, 2008

ஒரு சொல் வெற்றிடம்........

ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.

அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.

ஏதோ ஒரு பொழுதிலேனும்
அதற்கான
சரியான பதிலை - அவள்
மனக்காகிதத்தில் எழுதியிருக்கலாம்.
அதை காலத்தெருவில்
ஏதோ ஒரு தொலைவில்
தொலைத்துவிட்டிருக்கலாம்.

நினைவெங்கும் பசுமை
படர்ந்து கிடக்கிறது.
அவளுக்கே என்று
தந்துவிட்ட
என் இருதயத்தை
எழுதி கிழித்திருக்கலாம்.
ஏனோ
(அவளே எழுதாமல்)
இடம் விட்டிருக்கிறாள்.
யாரோ ஒருத்தி எழுதுவதற்காக
அந்த ஒரு சொல்
வெற்றிடத்தை..............

Saturday, August 30, 2008

கண்ணாடியில் அறைந்துகிடக்கும் பிரியம்

இன்னும் என்ன சொல்ல
கேள்விகளாலேயே
ஆகிவிட்டது உனது உலகம்
எதற்கும்
பதில்களை நீயாகவே
ஆக்கிக்கொள்வாய்
என்று நினைத்தே நான்
மௌனிப்பேன்

அந்தக் கேள்வியாலான
உனது வருத்தத்தை
துடைக்கும் எனது
சொற்களின் சுகம்
உன்னை இன்னும் வேதனை செய்து
அது என்னையும்
காயப்படுத்தும் என்பது
எனக்கென்ன தெரியும்

இருந்தும் நீ
இதுவரை சொன்னதில்லையே
நீ சிரிக்க,
நான் என் முகத்தில் பூசிய
சாயம் சரியில்லையென்று

புன்னகையைத் தவிர வேறு
பதிலே தெரியாதவள்
இப்போதெல்லாம்
குற்றச்சாட்டுக்களை மட்டுமே
முன்வைக்கிறாய்

ஏதோ
இழந்துவிடப் போகிறேன் என்று
எச்சரிக்கிறாய்
பெறுதலின் வலி
அதை இழக்கும் போதுதானே
புரிகிறது

பெற்றதத்தனையும்
இங்கே இழந்துவிட்டுத்தானே
போகிறோம்
இறுதியாக மூச்சை விட்டெறிந்து
உயிரை உதிர்க்கிற போதும்
உன் நினைவுகளை
இழக்கக்கூடாது
என்பதுதானே என் வேண்டுதல்கள்

சொல்லால் துளைத்து
எனை கொல்லாமல் கொல்ல
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்

மொழிகளை வேண்டுமானால்
புரிகிறபடி
மொழிபெயர்த்துக் கொள்ளலாம்
மனசையுமா???

என் விழிகண்டு
உயிரில் வேர்கொண்ட
பெண்மையே
என் அத்தனையுமே
புரியவில்லையா உனக்கு
அதைச்சொல்ல ஏன் இதுவரை
காத்திருந்துவிட்டாய்

சரிவரப் பதில்சொல்லாமல்
சிரித்துப் பேசியது
உன்னை
எவ்வளவு வேதனை
செய்திருக்கும்
உன் கோபம் நியாயம் தான்
அதற்காக
இதயத்தை தூக்கி
கண்ணாடியிலா அறைவாய்

இறுதியாக
கடவுளே
தீர்ப்பிடாமல் கைகழுவி விட
நான் உன் வார்த்தைகளால்
சிலுவையில் அறையப்படலாம்

என் கல்லறையில் வந்து
ஏமாற்றமடைந்து போகாதே
என் ஆவி
உன் நினைவுகளையும்
கூடவே எடுத்துச் சென்றுவிட்டிருக்கும்

இப்போதும் கூட எதுவும்
பேசத்தெரியாது - உன்னை
கெஞ்சிக் கொண்டிருக்கிறது
வார்த்தைகளின் வறட்சியில்
காய்ந்து கிடக்கும்
என் இருதயம்

மனசு என்பது
சொற்களால் ஆனதல்ல
மௌனங்கள் தான்
அதன் மொழி

இன்னொரு தடவை
மொழிபெயர்க்கிறேன்
இதையும் படித்துப்பார்

உன் நினைவுகளைப் புரட்டி
உயிரை உரித்து
கண்ணீரில் ஒரே வார்த்தையாக...