Thursday, September 18, 2008

நீ சொன்ன வார்த்தை.............

நீ சொன்ன வார்த்தை
சூறாவளியை எனக்குள்ளே
சுவீகரித்துப் போயிற்று.

இன்னும் என்ன சொல்ல
நீயே சொல்லிவிட்டாய் - கழகத்திற்கு
காரணம் நான் என்று.

மின்னல்களை
உன்னோடு வைத்துக்கொண்டு
இடியை என்னோடு
தந்துவிட்ட மேகச் சகியே.....
நீ பொழிந்துவிட்டுப்
போன பிறகும்
நானல்லவா கண்ணீர் நதி
வடிக்கிறேன்.

கலைந்து போ
இன்னும் சில தேசங்களை
குளிரவை
இன்னும் சில பாறைகளையும்
குப்புற விழுந்து - ஆறாய்
குமிறி அழ வை......

நினைத்த மாத்திரத்தில்
மறந்திருக்கலாமடி - நீ
இப்போது எப்படி
எடுத்த எடுப்பில்
வெட்டி எறியவா
இத்தனைக்கும் பழகவிட்டாய்
நம் வார்த்தைகளை...

ஊருக்கு பிடிக்கவில்லையா!
நிறுத்திவிடலாம்.
இன்னும் சிலது பிடிக்கவில்லையாம்
செய்துவிட்டு வா.......
உன் புன்னகை பிடிக்கவில்லையாம்
உன் வளர்ச்சி பிடிக்கவில்லையாம்
உன் அழகு பிடிக்கவில்லையாம்
தடுக்க சாத்தியமா???

இன்னும் உனக்கு
புரியவில்லை தானே !!!!!
நீ சிரிக்க யார் மகிழ்கிறார்களோ...
நீ வலிபட யார் அழுகிறார்களோ....
நீ வருகிறபோது மலர்வும்
உன்னை பிரிகிற போது
யார் கண்ணில் நீரும் வருகிறதோ
அவர்களே உன் தோழர்கள் என்று....

சினேகிதி
நீ பிரிவது குறித்த
வருத்தத்திலும்
இந்த உலகையும் உன்னையும்
புரியாது போகிறாய்
என்பதே என் வேதனை

இங்கே கலைந்துவிட்டு
இன்னொரு காட்டில் போய் - இதை
நினைத்து குறுகி அழப் போவதை
நினைத்தே என் வருத்தம்.

தோழி.....
தாங்கும் கைகளை
இங்கே விட்டு விட்டு
எங்கே போகிறாய் விழிசிந்த....

கெஞ்சல்களால் என்னை
தைத்துவிட்டு
எங்கே போகப்போகிறாய்
கொஞ்சல்களுக்கு.......

நான் செய்தது குற்றம் தான்
அரை விழிகளால்
குறையுடல் மேயும் பார்வைகளுக்கிடயில்
அங்கமெங்கும்
ஆசைகளை தொங்கவிட்டு
காத்திருக்கும் விழிவேட்டை நாய்களுக்கிடயில்
என் முழுவிழி கொண்டு
உன் முகம் பார்த்து பேசியது
குற்றம்தான்.

அழகே அன்பாய்
பணமே பாசமாய்
போய்விட்ட பிறகும்
அன்பே அழகாய்
வார்த்தைகளே சீதனமாய்
கொண்டது குற்றம் தான்.

முன்பெல்லாம் கோரிக்கைகளால்
என்னை கொடுமைப்படுத்துவாய்
பொறுத்துக்கொண்டேன்
இப்போது
கட்டுப்பாடுகளால்
கட்டிப்போட்டு விட்டாயே!!

சகியே....
கொடிது கொடிது
தீண்டாமை கொடிது.

கூந்தல் முடி
விரல் நுனி
ஏற்று - கள்ளமில்லாமல்
தொட்ட ஸ்பரிசம் - இப்போது
எப்படி குற்றமாயிற்று

எனக்கு
கோடி தெரியாது
பாடி அழைக்க
வாடி என்றேன்
வெடிக்கிறாய்.

என் குறும்புகளையும் கூட
தூக்கி வைத்து
எனக்கு செல்லம் கொடுத்தவள்
நீதானே...
இப்போது
என் சினுங்கல்களை
எங்கு போய் கொட்டுவேன்
நான்.............

Friday, September 5, 2008

ஒரு சொல் வெற்றிடம்........

ஒருத்திக்கு கொடுத்த
இதயம்
பாவிக்கபடாமல் வெறுமையாகவே
திரும்பி வந்திருகிறது.
அதன் பெயர் கூட மாற்றபடாமல்
இன்னும்
அவள் பெயரில் தான் இருக்கிறது.

அழுக்குப்படாமல்
இரத்தம் சிந்தாமல்
பத்திரமாய் திருப்பி கொடுத்து விட்டாள்.
எதற்காக என்றே புரியவில்லை.
ஒரு தரம் கூட - அவள்
படித்துக்கூடப் பார்க்கவில்லை.
நானும் நியாயம் கேட்கவில்லை.

ஏதோ ஒரு பொழுதிலேனும்
அதற்கான
சரியான பதிலை - அவள்
மனக்காகிதத்தில் எழுதியிருக்கலாம்.
அதை காலத்தெருவில்
ஏதோ ஒரு தொலைவில்
தொலைத்துவிட்டிருக்கலாம்.

நினைவெங்கும் பசுமை
படர்ந்து கிடக்கிறது.
அவளுக்கே என்று
தந்துவிட்ட
என் இருதயத்தை
எழுதி கிழித்திருக்கலாம்.
ஏனோ
(அவளே எழுதாமல்)
இடம் விட்டிருக்கிறாள்.
யாரோ ஒருத்தி எழுதுவதற்காக
அந்த ஒரு சொல்
வெற்றிடத்தை..............

Saturday, August 30, 2008

கண்ணாடியில் அறைந்துகிடக்கும் பிரியம்

இன்னும் என்ன சொல்ல
கேள்விகளாலேயே
ஆகிவிட்டது உனது உலகம்
எதற்கும்
பதில்களை நீயாகவே
ஆக்கிக்கொள்வாய்
என்று நினைத்தே நான்
மௌனிப்பேன்

அந்தக் கேள்வியாலான
உனது வருத்தத்தை
துடைக்கும் எனது
சொற்களின் சுகம்
உன்னை இன்னும் வேதனை செய்து
அது என்னையும்
காயப்படுத்தும் என்பது
எனக்கென்ன தெரியும்

இருந்தும் நீ
இதுவரை சொன்னதில்லையே
நீ சிரிக்க,
நான் என் முகத்தில் பூசிய
சாயம் சரியில்லையென்று

புன்னகையைத் தவிர வேறு
பதிலே தெரியாதவள்
இப்போதெல்லாம்
குற்றச்சாட்டுக்களை மட்டுமே
முன்வைக்கிறாய்

ஏதோ
இழந்துவிடப் போகிறேன் என்று
எச்சரிக்கிறாய்
பெறுதலின் வலி
அதை இழக்கும் போதுதானே
புரிகிறது

பெற்றதத்தனையும்
இங்கே இழந்துவிட்டுத்தானே
போகிறோம்
இறுதியாக மூச்சை விட்டெறிந்து
உயிரை உதிர்க்கிற போதும்
உன் நினைவுகளை
இழக்கக்கூடாது
என்பதுதானே என் வேண்டுதல்கள்

சொல்லால் துளைத்து
எனை கொல்லாமல் கொல்ல
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்

மொழிகளை வேண்டுமானால்
புரிகிறபடி
மொழிபெயர்த்துக் கொள்ளலாம்
மனசையுமா???

என் விழிகண்டு
உயிரில் வேர்கொண்ட
பெண்மையே
என் அத்தனையுமே
புரியவில்லையா உனக்கு
அதைச்சொல்ல ஏன் இதுவரை
காத்திருந்துவிட்டாய்

சரிவரப் பதில்சொல்லாமல்
சிரித்துப் பேசியது
உன்னை
எவ்வளவு வேதனை
செய்திருக்கும்
உன் கோபம் நியாயம் தான்
அதற்காக
இதயத்தை தூக்கி
கண்ணாடியிலா அறைவாய்

இறுதியாக
கடவுளே
தீர்ப்பிடாமல் கைகழுவி விட
நான் உன் வார்த்தைகளால்
சிலுவையில் அறையப்படலாம்

என் கல்லறையில் வந்து
ஏமாற்றமடைந்து போகாதே
என் ஆவி
உன் நினைவுகளையும்
கூடவே எடுத்துச் சென்றுவிட்டிருக்கும்

இப்போதும் கூட எதுவும்
பேசத்தெரியாது - உன்னை
கெஞ்சிக் கொண்டிருக்கிறது
வார்த்தைகளின் வறட்சியில்
காய்ந்து கிடக்கும்
என் இருதயம்

மனசு என்பது
சொற்களால் ஆனதல்ல
மௌனங்கள் தான்
அதன் மொழி

இன்னொரு தடவை
மொழிபெயர்க்கிறேன்
இதையும் படித்துப்பார்

உன் நினைவுகளைப் புரட்டி
உயிரை உரித்து
கண்ணீரில் ஒரே வார்த்தையாக...

Sunday, August 24, 2008

விழியே விதியெழுது


எங்கே தொடங்கி
எங்கே முடிப்பது

இதை எழுத காலம்
கடந்து போயிற்றோ
இதை
எழுத எழுத
சில வாரம் நீழுமோ
வார்த்தை
என்று நினைத்து
தவிர்க்க நினைக்கிறேன்
முடியவில்லை

எதற்காக
இவை எல்லாம்
நடந்து போயிற்று

யாரைக் குற்றம் சொல்வது

இப்போது
அப்போதெல்லாம்
நாம் பேச்சைக் குறைத்திருக்கலாம்
பழகுவதை
நிறுத்தியிருக்கலாம்
நான்
கனவுத் திரையில்
உன்னைத் தவிர்த்திருக்கலாம்
உணர்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்கலாம்
முடியவில்லயே

கோமோன்கள் எப்போது
நம் நரம்புகளில்
காதல் யோதியேற்றியது

நாம் பேசப் பேச
நம் இடைவெளி
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்து
உறவின் எல்லை
நாம் கடந்துவிட்டதை
நீயாவது உணர்ந்தாயா?
என் உறவுகளில் இருந்து நான்
தூரவிலகிப்போனதை
நானாவது உணர்ந்தேனா

யாருமே இல்லாத
ஒரு உலகத்திற்கு
என்னை கை பிடித்து
அழைத்து வந்துவிட்டு
பாதியில் மறைந்துவிட்ட
பரலோக தேவதையே
என் மீதி வழி
சேர்வதெப்படி - இல்லை
இங்கிருந்து மீழ்வதெப்படி

இப்போதாவது
"என்னை மறந்துவிடு"
என்று சொல்லிவிட்டுப்போ
நீயாவது
விடுவிக்கப்பட்டுவிட்டாய்
என்று
உன் வழியை
ஆசீர்வதிக்கிறேன்
கண்மணி
கண்ணீரோடு போகாதே
ஈரமான
உன் நினைவுகளுடனே
என்னை கொன்றுபோடாதே

எனை போகவேண்டாம்
என்று சொல்
இல்லை
விடை கொடு - போகிறேன்
திரும்பி நின்று
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லாதே

எல்லாவற்றிற்கும்
ஒரு கண்ணீரில்
பதிலளித்து விடுகிறாய்
எனக்குத்தான்
அதன் எந்த அர்த்தமும்
புரியவில்லை
என்று ஒரு பார்வை
கூடப் பார்க்கிறாய்

இதுகூடப் புரியாமலா
என் உயிரையே
உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்

என்ன செய்வது எனக்கு
உன்னைப் போல்
கண்களில்
ஒரு துளி வார்த்தையில்
பதில் சொல்லத்தெரியாதே

நான் பேசி
நீ குலுங்கி என்
மார்பில் கரைந்துவிட்டால்
அதை தாங்கும்
தைரியம்
என்னிடமில்லை

எல்லாவற்றிற்கும்
உனக்குத் தயக்கம்
முதலில் என்னிடம்
உன் காதலைச் சொல்ல
இப்போது
அதை உன்
வீட்டுக்குச் சொல்ல

"எனக்கு நிச்சயமாகிவிட்டது"
என்று
சொல்லிவிட்டாய்
உன்னையும் கொன்று
என்னையும் கொல்ல
இந்த ஒரு வரி விசம்
போதாதா

இத்தனைக்கும்
நீ மட்டுமா காரணம்
நானும்தன்
இன்னும் இரண்டு வருடம்
காத்திருக்கச் சொன்னேன்
காலத்தயா நிறுத்திவைத்தேன்

வயசு ஏற ஏற
எத்தனை வாய்ப்பை
தவறவிடச் சம்மதிப்பார்கள்
உன் பெற்றோர்

காதலில்
இரண்டு வகை அவஸ்த்தை
உண்டு
ஒன்று சேராத காதல்
இன்னொன்று சேராத காதலர்கள்

கடவுள் இரண்டு வழியாக
காதலர்களை சோதிக்கிறான்
ஒன்று
காதல் கைகூடாமல்
இன்னொன்று
கூடிய காதலர்களை
பாதி வழியில்
பிரித்து

நாம் பறவாயில்லை
காதல் பெருந்துயரத்தில்
தப்பி
பிரிவுத்துயரில் மாட்டியிருக்கிறோம்

நாட்கள்
நகர்ந்து கொண்டேதானிருக்கிறது
நான் மட்டும்
காத்திருக்கிறேன்
நீ விட்டுவிட்டுப்போன
அதே இடத்தில்
நின்று

அன்பே
திரும்பி வருவதானால்
சைகை காட்டு
இல்லை
.......................
விட்டுவிடு
நீ வருவாய் என்ற
நம்பிக்கையோடே
என் வாழ்வு நதியில்
நாட்கள் ஓடட்டும்

பிரிகிறபோதும் கூட
பிரார்த்தனை செய்கிறாய்
அர்ச்சனை செய்துவந்த
பிரசாதத்தை
என் நெற்றியில் பூசிவிடுகிறாய்
இது முற்றுப்புள்ளியா?
இல்லை
இன்னொரு ஆரம்பத்திற்கான
பிள்ளையார் சுழியா

இன்னுமா நீ
கடவுளை நம்புகிறாய்
நம்மை பிரித்ததே
எனதும் உனதும்
கடவுள்கள்தானே

கடவுள்கள்
சமரசம் செய்தாலொழிய
நம் கதை ஓடம்
இன்னொரு நதியில்
நாளை ஓடும்
வேறுசில காதலர் கண்ணீரில்

சொல்லியனுப்பு
நீ வருகிற செய்தியை
சொல்லாதே
உன் திருமணத் திகதியை
எனக்கே

Saturday, July 19, 2008

இளைய தலைமுறைக்கு இனியவிருந்து - ROY


இது நான் இரசித்த இலங்கை
கொங்சம் உள்ளே வந்து பாருங்கள்.
இன்னும் அழகு சேர்க்க
இன்னும் இன்பம் சுரக்க
காத்திருக்கிறேன்
வாருங்கள்
என்னோடு சேர்ந்து நீங்களும்
காதல் வானில் உலாப்போகலாம்

காதல்

இது இளைஞர்களின் சுவாசக்காற்று ஆகிற்றே
அதனால்த்தான்
என்னுடய இந்த இனிய
உணர்வுகளை சற்றும் தாமதிக்காமல்
உங்களோடு பகிர வந்திருக்கிறேன்
வருவீங்களில்லயா?

அன்புடன்
ROY

Thursday, July 17, 2008

WELCOME TO MY WEB PAGE

கடலின் தனிமை
காற்றின் வெறுமை
நிலவின் சுகந்தம்
இது பற்ரி சுவாசிக்காமல்
நான் இருந்துவிட முடியும்
நீ உன் விழிகளை என்மீது விரியவிடு

இப்படி எழுதினால்தானே உலகம் என்னைப்பர்க்கிறது அல்லது நானதை அங்கலாய்க்க மட்டும் முடியும் இல்லயா