
வார்த்தைகள்
அனாதையாய் அலைகிறதே ஏன்?
பூக்களின் சாரல் விழும்
சாலை ஓரத்தில்
தென்றல் ஒன்று
வேலை நிறுத்தம்செய்கிறதே ஏன்?
மேகங்கள் விரக்த்தியில் அலைவதுபோலவும்...
நட்சத்திரங்கள்
வெறுமையில் விளைவதுபோலவும்...
தோன்றுகிறதே ஏன்?
மேனிப்பரப்பெங்கும்
இருதயத்துக்குள்ளும்
தந்திமீட்டும் இசை ஒன்று
தெழ்ழமுதுக்குப்பதில்
மருந்தாய்க் கசக்கிறதே ஏன்?
இப்படி விடைதோன்றாக் கேள்விகள்
என் தனிமையின் கூட்டு வெளிச்சம்தானோ
என் வாழ்வெனும்
இசையில்
எல்லா வாத்தியங்களும்
பிடுங்கப்படுகிறபோது
உனது குரல் என்னும் இசைச்சுரம் கூடவா
மௌனித்துப்போகும்
இறுதியாக
உனது வார்த்தைகளின்
வரவுக்காய் காத்திருப்பதில்
நான் நிசப்தமாகிப்போனேன்
சங்கீத ஆலாபனையய்
இருந்தவன்
சாகித்தியங்களுக்காய் இரந்துநிற்கிறேன்
கூடொன்றில் சந்தித்தோம்
கூடியிருந்தோம்
பிரிந்தோம்
பிரியப்போவது பிரியங்களும்
என்று நினைக்கவில்லையே
இன்னும் சில
கிளிகளின் இசையும்
என்னிடமிருந்தன
இசையை இரசிப்பவன் நான் என்பதால்
ஆனால் என் சப்தஸ்வரங்களும்
உன்னிடமல்லவா இருந்தன
புரிந்துகொள்ளாதது நீ என்னும்போதுதான்
நான் பிரிந்துபோவதே எனக்குப் புரிகிறது
இதுபோல வலிகள் வரைந்த கோடுகளால்
பின்னப்பட்டுக்கிடக்கிறது
கலைந்துபோன நமது வண்ணங்கள்
நான் உன்னை தவிர்ப்பதாகச் சொல்லி
நீ என்னை தவிர்க்கிறாய்
தருவது நீயாக இருந்தால் - எனக்கு
வலிகூட சுகமென்பது புரியாதா உனக்கு
நான் கேட்காமலே என்னோடு சாலையோரத்தில்
நடக்க பிடித்திருந்தது உனக்கு
இப்போது சாலையோரம் சகாராவாய் சுடுகிறது
நான் செல்கையில் உனக்கு
ஸ்வரங்களில்லாமல் சங்கீதமேது?...
எனது நேசம் இசைச் சுரங்களால் ஆனது
அந்த இசையில் இருந்து நான்
தொலைவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
.....மீண்டும் நான் இசையாவேன்

1 comment:
super kavithai read pannum pode kangal kalangu kindrathu. "valigal varaitha un koodugalukku" kattayam oru full stop kidaikum. kavalai padathe namba..........
Post a Comment